
வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு சம்பாதித்த சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணத்தையும் தங்க நகைகளையும் அபகரிக்கும் நோக்கில் தனது 65 வயது தாயைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 32 வயது இளைய மகளும் அவரது 25 வயது கள்ளக்காதலனும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (16) இந்த சந்தேகநபர்கள் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர், திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட எத்துங்கம சந்தியில் வசித்து வந்த பி. பத்மலதா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாவார். அவர் சுமார் 24 வருடங்களாக வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்துள்ளார். அவரது தலையீட்டின் பேரில், இளைய மகளும் சுமார் 14 வருடங்களாக வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளார். மகளின் முதல் திருமணம் தோல்வியடைந்த பின்னர், ஒரு தோழி மூலம் அறிமுகமான குருநாகல் இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவத்திலிருந்து தப்பி ஓடிய ஒரு சிப்பாயுடன் அவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த மகள், வலகம்பாகுவ பைண்டிகுளம் பிரதேசத்தில் உள்ள தனது சித்தியின் வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் தாயின் வேண்டுகோளின் பேரில் கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி அளவில் மகளும் அவரது கள்ளக்காதலனும் திரப்பனையில் உள்ள தாயின் வீட்டிற்கு வந்துள்ளனர். சந்தேகநபரான இளைஞன் அந்த வீட்டில் மதில் சுவர் கட்டும் வேலையாளாகவும் பணிபுரிந்துள்ளார். இருப்பினும், இவர்கள் மூவரும் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் பணம் தொடர்பாக அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன.
கடந்த மே 11ஆம் திகதி தாய், மகளின் கள்ளக்காதலனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். அவர் தனது சொந்த ஊரான இப்பாகமுவவுக்குச் செல்வதாகக் கூறி பைண்டிகுளத்தில் உள்ள சித்தியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அடுத்த நாள் (12) மகளும் வெளிநாடு செல்வதற்காக கடவுச்சீட்டைத் தயாரிக்க வேண்டும் என்று கூறி சித்தியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அன்று இரவு 7.00 மணியளவில் மகள் வாடகை முச்சக்கர வண்டியில் மீண்டும் தாயின் வீட்டிற்கு வந்துள்ளார். கள்ளக்காதலன் திரப்பனை உணவகத்தில் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து இந்தக் கொலையைச் செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைக்குப் பிறகு இந்த ஜோடி பஸ்ஸில் தம்புள்ளை பிரதேசத்திற்குச் சென்று அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். அடுத்த நாள் மகள் தாய்க்கு தொலைபேசி அழைப்புகள் விடுத்து பதிலில்லாததால் வீட்டிற்கு வந்ததாகவும், தாய் நோய்வாய்ப்பட்ட நிலையில் படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் கூறி திரப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
திரப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் டி.டி.எஸ்.கே.பி. ஜயதிலக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், உறவினர்களின் வாக்குமூலங்கள் முரண்பட்டதாலும், சி.சி.டி.வி. காட்சிகளின் மூலமும் இது ஒரு கொலை என்று பொலிஸார் சந்தேகித்துள்ளனர். அனுராதபுரம் நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு, மேலதிக பரிசோதனைகளுக்காக உடல் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த 15ஆம் திகதி திரப்பனை பொது மயானத்தில் இறந்த பெண்ணின் இறுதிச் சடங்குகள் நடைபெறவிருந்தன. சடலத்தை வீட்டிலிருந்து எடுத்துச் செல்லத் தயாராக இருந்தபோது, பொலிஸார் மகள், அவரது கள்ளக்காதலன் மற்றும் சித்தி ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
