கடுவலை நகர முதல்வருக்கு எதிராக விசாரணை

an-investigation-against-the-mayor-of-kaduwela

கடுவலை நகர முதல்வர் ரஞ்சன் ஜெயலால் செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் அச்சுறுத்தல் மற்றும் ஒரு வழக்கறிஞருக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணையை நடத்துமாறு கடுவலை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து பொலிஸார் எந்த விசாரணையும் நடத்தவில்லை என வழக்கறிஞர்கள் தெரிவித்ததையடுத்து, கடுவலை, மாலபே மற்றும் வெலிக்கடை பொலிஸ் நிலையங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




விலங்கு நலன்புரி குழுவொன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி வழக்கறிஞர் நேத்ரபாணி டயஸ் உள்ளிட்ட குழுவினர், முன்னரே திட்டமிடப்பட்ட சந்திப்பிற்காக கடுவலை நகர சபை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு நகர முதல்வர் அவர்களை அச்சுறுத்தி வளாகத்திலிருந்து வெளியேற்றியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் குறித்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன் பின்னர், மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவரது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளனர்.

முறைப்பாட்டாளர் வழக்கறிஞரின் தரப்பு, அவரது முறைப்பாடு குறித்து பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது. ஆனால், சம்பந்தப்பட்ட சம்பவத்திற்குப் பதிமூன்று நாட்களுக்குப் பிறகு நகர முதல்வர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து வாக்குமூலம் கூட பெறாமல் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், நகர முதல்வர் ஜெயலால் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, அவை பொய்யானவை என்று தெரிவித்தனர்.




விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான் புத்ததாச, நகர முதல்வரின் முறைப்பாடு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகளை வழங்குமாறு உத்தரவிட்டதுடன், அனைத்து முறைப்பாடுகளையும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பணித்தார். இங்கு முறைப்பாட்டாளர் வழக்கறிஞர் நேத்ரபாணி டயஸ் சார்பாக கமல் விஜேசிறி, சந்தியா தல்டூவ, சஜித் தென்னக்கோன் மற்றும் சஞ்சீவ கமகே ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகினர். ஜெயலால் சார்பாக டி. ஜி. பி. கருணாரத்ன மற்றும் சுசந்த தொடவத்த ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

Post a Comment

Previous Post Next Post