துபாய் அரசால் அண்மையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களில், பொரளை சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் நடந்த இரட்டை கொலை சம்பவத்தின் முக்கிய துப்பாக்கிதாரி ஒருவரும் இருப்பதாக கொழும்பு குற்றப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர். பொரளை சிறிசர உயன விளையாட்டு மைதானத்தில் இருந்த இருவரை டி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், மேலும் மூவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய கொடூரமான குற்றச் செயல் தொடர்பில் இந்த முன்னாள் இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த கொலையைச் செய்ய சந்தேகநபருக்கு டி-56 ரக துப்பாக்கியை வழங்கியதாகக் கூறப்படும் பொரளை சிறிசர உயனவைச் சேர்ந்த குமார ரத்னம் இந்திரா பிரியதர்ஷினி என்ற பெண் ஒருவரும் கடந்த 25ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்த மஹவத்த சாமர மற்றும் வனாதே குடு துமின் உட்பட 21 முக்கிய குற்றவாளிகள் அடங்கிய குழுவொன்று கடந்த 22ஆம் திகதி இரண்டு விமானங்களில் துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்ட இந்த குழுவினர் மேலதிக விசாரணைகளுக்காக 4 பொலிஸ் நிலையங்களுக்கும் 14 விசேட விசாரணைப் பிரிவுகளுக்கும் தனித்தனியாக ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு ராஜகிரிய போதிராஜா மாவத்தையைச் சேர்ந்த தில்ஷான் சுகத் குமார என்ற நபராக ஆள்மாறாட்டம் செய்த சந்தேகநபர் ஒருவர் நுகேகொட பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் வழங்கிய அனைத்து தகவல்களும் பொய்யானவை என்பது தெரியவந்தது. அவர் ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவரது உண்மையான அடையாளம் ஓபத்த, பானகல, மாஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்திர ரஜித் சூரியாராச்சி அல்லது 'ரவி' என்ற நபர் என்றும் பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொரளையில் நடந்த இரட்டை கொலைக்குப் பிறகு, இந்த சந்தேகநபர் போலியான தகவல்களை உள்ளிட்டு ஒரு தேசிய அடையாள அட்டையை தயாரித்துள்ளார். பின்னர், ராஜகிரிய முகவரியில் தில்ஷான் சுகத் குமார என்ற பெயரில் போலியான கடவுச்சீட்டையும் பெற்றுள்ளார். இந்த போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, கொலை நடந்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதாவது கடந்த பெப்ரவரி மாதம், அவர் துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேகநபர் போலியான தகவல்களின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் சில அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார் என்பதும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது 33 வயதாகும் இந்த கொடூரமான துப்பாக்கிதாரி தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு பெற்று விரிவான விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.