
கொட்டாவ மற்றும் அத்துருகிரியவை இணைக்கும் பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை சந்தை சந்திக்கு அருகில் வீதியில் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்து 28 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், அவரது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்கள் எவரும் இதுவரை முன்வரவில்லை என கொட்டாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதனால், அப்பெண்ணின் சடலத்தை ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்க பொலிஸ் அதிகாரிகளுக்கு நேர்ந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி குறித்த இடத்தில் ஆதரவற்று வீழ்ந்து கிடந்த இந்த பெண், "சுவசாரிய" அம்புலன்ஸ் சேவை மூலம் உடனடியாக ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மே மாதம் 01ஆம் திகதி அவர் உயிரிழந்தார். அதன் பின்னர், உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு பிரேத பரிசோதனை நடத்துவதற்காக பாதுகாவலர்களைக் கண்டறியும் நோக்கில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்து விசேட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 25 நாட்கள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை எந்த தரப்பிலிருந்தும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழக்கும் போது சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க இந்த பெண், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறுகிய காலத்தில் தனது பெயர் "சந்தமாலி" என்று தெரிவித்திருந்தாலும், அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய வேறு எந்த ஆவணமோ அல்லது சாட்சியமோ இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே, இந்த பெண்ணை அறிந்தவர்கள் அல்லது அவரைப் பற்றிய ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 0718-591656 அல்லது 0112-782760 என்ற தொலைபேசி எண்களில் கொட்டாவ பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டு, பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவியை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுக்கின்றனர்.