ஐக்கிய இராச்சியத்தில் உயர்கல்வி கற்கும் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரின் மகள் ஒருவர் தற்போது தமிழ்ப் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான வீட்டில் வசித்து வருவதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமர சம்பத் தசநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் விசேட வெளிப்படுத்தலை மேற்கொண்டார். அரசாங்க அமைச்சர்கள் புலம்பெயர் சமூகத்துடன் தொடர்புகளைப் பேணுவது குறித்து தாம் எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், ஏனைய தரப்பினருடன் உறவுகளைப் பேணும் அதேவேளை, இவ்வாறான புலம்பெயர் உறவுகள் குறித்தும் நாட்டுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன், வெற்றி விழாக் கொண்டாட்டங்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த நோக்கமும் தமக்கு இல்லை என்ற போதிலும், இந்த உண்மையான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தசநாயக்க, மேலும் பல கடுமையான விடயங்களை வெளிப்படுத்தியதுடன், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரியொருவரின் நடத்தையை கடுமையாக விமர்சித்தார். குறித்த அதிகாரி ஒரு சித்திரவதையாளராக அல்லது 'கொலையாளியாக' செயற்பட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் அண்மைய மரணம் குறித்தும் கருத்து தெரிவித்தார். "கொன்று தூக்கிலிடப்பட்டதா - தூக்கிலிட்டு கொல்லப்பட்டதா" என்ற பாடல் வரியை மேற்கோள் காட்டி, இலஞ்ச ஆணைக்குழுவுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த அதிகாரி தனிப்பட்ட கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என்பதை இது உணர்த்துவதாக அவர் கூறினார்.