அனுராதபுரம், விமான நிலைய வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி கிராம சேவகர் ஒருவர் கடந்த 27ஆம் திகதி துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். கவரக்குளம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற இந்த விபத்தில் அனுராதபுரம், 3ஆம் படி, இல. 26/40 முகவரியில் வசித்து வந்த ஆர்.எம்.
பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற 32 வயதுடைய பெண் ஆவார். இவர் மத்திய நுவரகம்பலாத்த பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்டு, மகபுலங்குளம் 283 துலான பிரதேசத்தில் கிராம சேவகராக கடமையாற்றியவர்.பொலிஸ் அறிக்கைகளின்படி, இந்த விபத்து கடந்த 18ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த கிராம சேவகர் மற்றொருவரை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர வைத்துக்கொண்டு கவரக்குளம் திசையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இலகு ரக லொறி ஒன்று அவர்களின் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின் இருக்கை பயணியும் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிராம சேவகர் உயிரிழந்துள்ளார். அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது வயிற்றில் இருந்த பிறக்காத குழந்தையும் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த கோர விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இலகு ரக லொறியின் சாரதியை கவரக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம், மிஹிந்தலை வீதி, குருந்தன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கவரக்குளம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.