
அனுபவம் வாய்ந்த சட்டத்தரணியும், அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான ஜனாதிபதி சட்டத்தரணி தயா பெல்போலா தனது 85 ஆவது வயதில் காலமானார்.
பெல்போலா அவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டச் செயலாளராகப் பணியாற்றினார். அத்துடன், அவர் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றி, கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றினார்.
நல்லாட்சிக் காலத்தில், அவர் 2015 முதல் 2019 வரை இத்தாலிக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டார். அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் கல்வி உறவுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தேசிய லொத்தர் சபை மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் தலைவராகப் பணியாற்றியது உட்பட பல முக்கிய அரச துறைப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.
தயா பெல்போலா அவர்களின் பூதவுடல் பத்தரமுல்லை, பெலவத்த, லியனகே மாவத்தையில் உள்ள இலக்கம் 78 ஆம் இலக்க வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று (டிசம்பர் 16) பிற்பகல் 3.00 மணிக்கு பெலவத்த லியோன் பெஸ்டன் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெறவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணிக்கு பொரளை கனத்தையில் நல்லடக்கம் செய்யப்படும்.