தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு சுற்றுலா விசாவின் கீழ் நாட்டிற்கு வந்து இணையம் மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் சைபர் குற்ற வலையமைப்புடன் தொடர்புடைய ஏராளமான வெளிநாட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளனர்.
காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 84 இந்தியப் பிரஜைகளும், காலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மேலும் 27 இந்தியப் பிரஜைகளும் காலி பிரதான நீதவான் சமீர டொடங்கொட முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்களுக்கு தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான தனிப்பட்ட பிணை வழங்கப்பட்டது. மேலும், சந்தேகநபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்குமாறும், அவர்களின் வெளிநாட்டுப் பயண அனுமதிப்பத்திரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இவர்கள் இணையம் மூலம் இந்த நிதி மோசடிகளைச் செய்துள்ளதாகவும், அவர்களிடம் இருந்து 49 கணினிகள் மற்றும் 45 கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தமது கட்சிக்காரர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். சிரேஷ்ட சட்டத்தரணி ரஜிந்திர நாரங்கொட, நுவன் பாலகே, ஏ.டி.சி. தர்ஷன மற்றும் சலக டி சில்வா ஆகியோர் அடங்கிய சட்டத்தரணிகள் 27 சந்தேகநபர்களுக்காக ஆஜராகினர். வழக்கின் மேலதிக நடவடிக்கைகளுக்காக விசாரணையை 21 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த பிரதான நீதவான், அன்றைய தினம் இந்தி மொழிபெயர்ப்பாளர் ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறும் உத்தரவிட்டார். காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.கே.எஸ். ரூபசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், காலி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சிந்தக பனாவல, பிரதான பொலிஸ் பரிசோதகர் மதுரங்க, உப பொலிஸ் பரிசோதகர் ரோஹண உள்ளிட்ட பல சார்ஜன்ட்கள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் அடங்கிய அதிகாரிகள் குழுவினால் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கிடையில், கடந்த 11 ஆம் திகதி டொடந்துவ பிரதேசத்தில் ஒரு தங்குமிடத்தில் இரகசியமாக நடத்தப்பட்டு வந்த மற்றொரு சைபர் குற்ற மையத்தை சுற்றிவளைத்து 55 வெளிநாட்டவர்களை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், விசேட அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களில் 35 இந்தியப் பிரஜைகளும் 20 நேபாளப் பிரஜைகளும் அடங்குவதாக காலி மாவட்டப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியது. அவர்களிடம் இருந்து 22 கணினிகள் மற்றும் 152 கையடக்கத் தொலைபேசிகள் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டன.
இந்த வெளிநாட்டவர்கள் டொடந்துவ பிரதேசத்தில் உள்ள குறித்த தங்குமிடத்தை மாதத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா வாடகை அடிப்படையில் இந்த மோசடியை நடத்துவதற்காகப் பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்கள் இந்த இடத்திற்கு வந்துள்ளனர். இந்த சைபர் குற்ற வலையமைப்பை இயக்கிய முக்கிய சூத்திரதாரி வேறு இடத்தில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட்ட 55 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சைபர் குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.