எதிர்வரும் காலத்தில் இலங்கைக்குத் தேவையான எரிபொருள் விநியோகம் எந்தவித இடையூறும் இன்றி மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கலாநிதி அனுர கருணாதிலக்க வலியுறுத்தியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார். நாட்டிற்குத் தேவையான எரிபொருள் கையிருப்புக்கு உரிய முறையில் ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என்பதையும் அவர் அங்கு உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், தற்போது நடைமுறையில் உள்ள QR ஒதுக்கீட்டு முறையை எதிர்காலத்தில் கைவிட அரசாங்கத்திற்கு எந்தத் திட்டமும் இல்லை என்றும் அமைச்சர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். வெளிநாட்டு நாணயம் அல்லது டொலர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதும், தேவையற்ற எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதும் இந்த முறையைத் தொடர்ந்து பராமரிப்பதற்கான முக்கிய நோக்கங்களாகும்.
இருப்பினும், தற்போதைய பொதுத் தேவைகளை உரிய முறையில் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் நுகர்வோருக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பதில் ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கலாநிதி அனுர கருணாதிலக்க மேலும் தெரிவித்தார்.