திருமண வீட்டிலிருந்து திரும்பும் வழியில், வேன் மரத்தில் மோதி 11 பேர் மருத்துவமனையில்

11-people-are-in-the-hospital-when-the-van-crashes-into-a-tree-while-coming-from-the-wedding

மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து மனாம்பிட்டிய நோக்கிச் சென்ற வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி மாலை 5.00 மணியளவில் மனாம்பிட்டிய மகாவெவ கவங்குவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக செயற்பட்ட பிரதேசவாசிகளாலும் பொலிஸாராலும் பொலன்னறுவை மற்றும் மனாம்பிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.




மட்டக்களப்பு பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டு தமது வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோதே இவர்கள் இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தை எதிர்கொண்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் மனாம்பிட்டிய தமிழ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஓடிக்கொண்டிருந்த வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கோன் மரத்துடன் மோதியுள்ளதுடன், அதிவேகம், கவனக்குறைவான சாரதி மற்றும் சாரதிக்கு தூக்கம் வந்தமை ஆகியவையே இந்த விபத்துக்கு நேரடி காரணம் என மனாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் எட்டு வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாகவும், வான் சாரதி உட்பட மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது விபத்தில் காயமடைந்த ஒன்பது பேர் பொலன்னறுவை பொது வைத்தியசாலையிலும், மற்ற இருவர் மனாம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையிலும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மனாம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.ஜி.ஏ.சி. ஆரியரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

11-people-are-in-the-hospital-when-the-van-crashes-into-a-tree-while-coming-from-the-wedding

Post a Comment

Previous Post Next Post