இலங்கையில் பாடசாலை மாணவர்களில் கணிசமானோர் உடல் பருமன் உள்ளிட்ட ஊட்டச்சத்துப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. சுகாதார அமைச்சின் ஊட்டச்சத்துப் பிரிவின் பணிப்பாளரும், விசேட வைத்தியருமான மொனிகா விஜேரத்ன அம்மையார் சுட்டிக்காட்டியுள்ளபடி, 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாடசாலை சுகாதார ஆய்வின்படி, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 12 சதவீதம் பேர் அதிக எடையுடனும், 3 சதவீதம் பேர் உடல் பருமனுடனும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, 2021 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இலங்கை பெண்களில் 47.6 சதவீதமும், ஆண்களில் 30 சதவீதமும் அதிக எடையுடன் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கு முக்கியமாக குழந்தைகளின் தவறான உணவுப் பழக்கங்களே காரணமாகும். ஆய்வுகளின்படி, 28.5 சதவீதம் குழந்தைகள் அதிக உப்புள்ள உணவுகளையும், 29 சதவீதம் குழந்தைகள் அதிக எண்ணெய் உள்ள உணவுகளையும், 14 சதவீதம் குழந்தைகள் அதிக சர்க்கரை உள்ள உணவுகளையும் தினசரி உட்கொள்ளப் பழகியுள்ளனர். குழந்தைகளிடையே வேகமாகப் பரவி வரும் இந்த உடல் பருமன் மற்றும் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், சுகாதாரம் மற்றும் கல்வி அமைச்சுகள் இணைந்து புதிய திட்டமொன்றை வகுத்துள்ளன. அதன்படி, 'ஆரோக்கியமான பாடசாலை சிற்றுண்டிச்சாலை வழிகாட்டி' என்ற புதிய திட்டம் தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியவந்துள்ளது.
தீவு முழுவதும் உள்ள 10,046 பாடசாலைகளில் கல்வி கற்கும் சுமார் 39 இலட்சம் மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த வழிகாட்டி அறிமுகப்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்துப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பி. சுதர்சன பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக கல்விச் செயலாளரின் கையொப்பத்துடன் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், அது 2026 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரவுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளில் விற்கக்கூடிய மற்றும் விற்கத் தடைசெய்யப்பட்ட உணவுப் பட்டியல்கள் இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய வழிகாட்டுதல்களின் கீழ், பாடசாலை குழந்தைகளுக்கு சத்தான மற்றும் சுத்தமான உணவை வழங்குதல், சரியான உணவுப் பழக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் பாடசாலை வளாகம் அல்லது சிற்றுண்டிச்சாலையில் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்தல் ஆகியவை மேற்கொள்ளப்படும். மேலும், பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்கு ஏற்ப A, B மற்றும் C என தரப்படுத்தப்படும். அத்துடன், அந்த தரங்களுக்கு இணங்காத சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். குழந்தைகளுக்கு உகந்த புதிய உணவுப் பட்டியல்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஊட்டச்சத்து மாதமாகக் கருதப்படும் ஜூன் மாதத்துடன் இணைந்து, இந்த புதிய வழிகாட்டி எதிர்வரும் 22 ஆம் திகதி கொழும்பு மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களின் தலைமையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.