புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 150 கிலோ தங்கம் நீதிமன்றத்திற்கு

150-kilos-of-gold-caught-from-tigers-to-the-court

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இருந்த விடுதலைப் புலிகளின் முகாம்களிலிருந்தும், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் இராணுவத்தால் மீட்கப்பட்ட 150 கிலோகிராம் தங்க நகைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.

நேற்று (23) பாராளுமன்றத்தில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது, இலங்கை இராணுவம் எந்த சந்தர்ப்பத்திலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடமிருந்து நகைகளை பலவந்தமாகப் பெற்றுக் கொள்ளவில்லை என்று அவர் தெளிவாகக் கூறினார்.




இந்த தங்க நகைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயல்முறை, நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மற்றும் இலங்கை மத்திய வங்கி இணைந்து மேற்கொள்ளும் ஒரு சிக்கலான திட்டம் என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்த ஒப்படைப்புப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய பிரதி அமைச்சர், அதன் பின்னர் அந்த நகைகளை அவற்றின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான முறையான திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில், அப்போதைய அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 2015 பேருக்கு இவ்வாறு மீட்கப்பட்ட நகைகளை மீண்டும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எஞ்சியுள்ள தங்க நகைகளையும் அதேபோன்ற வெளிப்படையான திட்டத்தின் கீழ் உண்மையான உரிமையாளர்களைக் கண்டறிந்து ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த தங்க நகைகளின் உரிமையாளர்கள் குறித்த முழுமையான தகவல்கள் தற்போது இராணுவத்திடம் இல்லை என்றும், நீதிமன்ற செயல்முறை முடிந்ததும் அதற்கான பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அருண ஜயசேகர மேலும் தெரிவித்தார்.




விடுதலைப் புலிகளின் முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட இந்த நகைகள் குறித்து எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தல் மேடைகளிலோ அல்லது தேர்தல் தொடர்பான வேறு எந்த கலந்துரையாடல்களிலோ பேசப்படவில்லை என்று பிரதி அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். மேலும், இந்த தங்க நகைகள் தொடர்பான எந்தவொரு விடயமும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என்றும் அவர் பாராளுமன்றத்தில் மேலும் கருத்துத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post