2022 இல் கொழும்பு மாநகர சபையில் 50 கோடி மோசடி

50-crore-scam-in-colombo-municipality-in-2022

2022 ஆம் ஆண்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போர்வையில் கொழும்பு மாநகர சபைக்குள் சுமார் 50 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு ஏற்கனவே ஒரு விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.




கொழும்பு நகர எல்லைக்குள் வாழும் சுமார் ஒன்றரை இலட்சம் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு தலா 3,500 ரூபா நிதி உதவி வழங்கப்பட்டதாகக் குறிப்புகள் இடப்பட்டு இந்த பாரிய நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த விசாரணைகளில் சம்பந்தப்பட்ட பணத்தைப் பெற்றுக் கொண்ட எந்தவொரு நபரையோ அல்லது அதற்காக வழங்கப்பட்ட எந்தவொரு ஆவணத்தையோ இதுவரை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பது தீவிர கவனத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், உண்மையில் இந்த கொடுப்பனவுகளுக்கு யார் அனுமதி வழங்கினார்கள் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இது தவிர, வாகன தரிப்பிடங்கள் மற்றும் பொது கழிப்பறைகளை குத்தகைக்கு விடும் செயல்முறையிலும் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குழுவுக்கு, 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற சட்டவிரோத ஆட்சேர்ப்புகள், கொள்முதல் வழிகாட்டுதல்களை மீறியமை, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள், அதிகாரம் மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்தமை அத்துடன் அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய வழக்குகள் மற்றும் சமரசங்கள் உட்பட அனைத்து மோசடிகளையும் கண்டறியும் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.




இந்த விரிவான விசாரணைகள் ஆரம்பமானவுடன், மாநகர சபையின் சில அதிகாரிகள் கடும் அச்சமடைந்துள்ளதாகவும், அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டது போல் காண்பித்து மாநகர சபைக்கு வருவதைத் தவிர்த்து வருவதாகவும் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர், எதிர்பார்த்ததை விட மிகப்பாரிய அளவிலான சம்பவங்கள் மாநகர சபைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும், இரகசியப் பொலிஸ் அதிகாரிகளும் அடங்கிய திறமையான விசாரணைக்குழு மூலம் அவை அனைத்தும் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் கீழ், 2025 டிசம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2469/08 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, கொழும்பு 03, காலி வீதி, இலக்கம் 152 இல் இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி சட்டத்தரணி பியசேன ரணசிங்க செயற்படுவதுடன், இலங்கை கணக்காளர் சேவையின் (தரம் 1) ஈ.ஆர்.எம்.எஸ்.எச். ஏகநாயக்க மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்க ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post