புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் என்று கூறிக்கொள்ளும் அமித் வீரசிங்க என்பவர், கபானா கட்டுமானத் திட்டம் என்ற போர்வையில் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திட்டத்திற்காக பணம் வழங்கியவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணைகளில் இந்த பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளது.
இந்த போலி கபானா திட்டத்தில் பணம் முதலீடு செய்த சுமார் பதினெட்டு பேர் இதுவரை பொலிஸாரிடம் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் முன்தினம் (02) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தெரிவித்துள்ளதாவது, குறித்த பணத்தை மூன்று மாத காலத்திற்குள் முறைப்பாட்டாளர்களுக்குத் திரும்பச் செலுத்த தான் இணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அங்கு சந்தேகநபர் அமித் வீரசிங்கவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 10.00 மணிக்கும் நண்பகல் 12.00 மணிக்கும் இடையில் தெல்தெனிய பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்கவின் அறிவுறுத்தலின் பேரில், தெல்தெனிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.டி. சந்திரபால உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.