கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் எந்தவொரு பௌதீக பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் விடுவிக்கப்பட்டது தொடர்பில் விசாரணை செய்யும் பாராளுமன்ற விசேட குழுவினால், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மற்றுமொரு முன்னாள் உயர் அதிகாரியிடம் நேற்று (03) விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
குறித்த கொள்கலன் தொகுதி துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட செயல்முறையின் போது சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக அந்த முன்னாள் சுங்கத் தலைவர் குழுவிடம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக, நேரடியாக சம்பந்தப்பட்ட தரப்பினரை மாத்திரம் எதிர்காலத்தில் அழைப்பதற்கும் குறித்த குழு நேற்று தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்காரவின் தலைமையில் நேற்று பாராளுமன்றத்தில் கூடிய இந்த விசேட குழு, இதுவரை சுமார் பத்து பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் தலைவர்கள் தவிர, முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி உதய கம்மன்பில மற்றும் பிரபல சமூக ஆர்வலர் நாகானந்த கொடிதுவக்கு ஆகியோரும் இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் அடங்குவர்.
இந்த விசாரணை தொடர்பான குழுவின் இறுதி அறிக்கை, அவர்களின் முதல் கூட்டம் நடைபெற்ற நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. சிவப்புப் பிரிவு (Red Channel) கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்த இந்த 323 கொள்கலன்கள் சுங்கப் பரிசோதனை இன்றி விடுவிக்கப்பட்டது ஒரு தவறு என, இது குறித்து ஆராய நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் 2025 ஜூன் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.