விலை, எடை, திகதி குறிப்பிடப்படாமல் உணவு விற்ற Barista-க்கு அபராதம் விதிக்கப்பட்டது

barista-who-sold-food-without-price-weight-date-will-be-fined

நுகர்வோர் பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்ட பண்டாரவளையில் அமைந்துள்ள ‘Barista Coffee Lanka Pvt Ltd (Barista Express)’ நிறுவனத்திற்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் நான்கு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட அலுவலக அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பை அடுத்து இந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நான்கு பாரதூரமான குற்றச்சாட்டுகளை பிரதிவாதி நிறுவனம் ஏற்றுக்கொண்டதன் பின்னர் நேற்று (10) இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.




இந்தச் சுற்றிவளைப்பின் போது கண்டறியப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. விலை, எடை, உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகள் போன்ற அத்தியாவசியத் தகவல்கள் எதுவும் லேபிலில் குறிப்பிடப்படாமல் கேக்குகளை விற்பனை செய்தமை மற்றும் அதேபோன்ற லேபிள் விவரங்கள் இல்லாத பிஸ்கட் பொதிகளை விற்பனைக்கு காட்சிப்படுத்தியமை ஆகியவை இதில் அடங்கும். மேலும், நுகர்வோர் சட்ட விதிகளுக்கு முரணாக காலாவதியான பிஸ்கட் பொதிகளை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் நுகர்வோரை தவறாக வழிநடத்தும் மற்றும் ஏமாற்றும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்களை மற்ற உணவுப் பானங்களைத் தயாரிப்பதற்காக குளிர்சாதனப் பெட்டிகளிலும் களஞ்சியங்களிலும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கும் நிறுவனம் இங்கு குற்றவாளியாகக் காணப்பட்டது.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களிடம் விசேட வேண்டுகோளை விடுக்கிறது. எவ்வளவு பிரபலமான வர்த்தக நாமத்தைக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இடத்திலிருந்து உணவுப் பொருட்களை வாங்கும்போதும், அவற்றின் லேபிள்கள், விலைகள் மற்றும் காலாவதி திகதிகள் குறித்து நுகர்வோர் எப்போதும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டுகிறது. மேலும், இவ்வாறான நுகர்வோர் சட்ட மீறல்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறும் அழைப்பு இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post