கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே மிகவும் நலமாக இருப்பதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (23) கொழும்பில் தெரிவித்தார். அவர் உணவு உட்கொள்வதை மறுத்தாலும், அவருக்கு குழாய் மூலம் உணவு வழங்கப்படுவதாகவும், அவர் வார்டுக்குள் நடந்து, ஆடை அணிந்து தனது நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் கூறினார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் உடல்நலம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
“சுரேஷ் சலேவின் பிரச்சினை என்னவென்றால், அவர் வாய் வழியாக உணவு உட்கொள்ளாததுதான். இருப்பினும், தேசிய வைத்தியசாலையில் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 16 நாட்களாக அவர் உண்ணாவிரதம் இருப்பதாகக் கூறப்படுகிறது, இது ஒரு பிரச்சினைதான். ஆனால் அவர் நடக்கிறார். ஆடை அணிகிறார். குழாய் மூலம் மூக்கு வழியாக உணவு உட்கொள்கிறார்.
அந்த ஊட்டச்சத்து அவருக்கு கிடைக்கிறது. அதன்படி, அவர் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார். அந்த அளவு உணவு வீட்டிலிருந்தும் அவருக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த அளவு போதவில்லை என்றால், மனைவிக்குச் சொல்லி அதிக உணவு கொண்டு வரச் சொல்லலாம்.
கேள்வி:- சுரேஷ் சலேவுக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களா?
பதில்:- அவரது தற்போதைய பிரச்சினை சாப்பிடாததுதான். சாப்பிட கொடுக்காதது அல்ல. சாப்பிடாதது அவர்தான். சாப்பிடாததற்கு மேடைகள் அமைத்தோ, கூட்டங்கள் நடத்தினாலோ, ஊடகவியலாளர் சந்திப்புகள் நடத்தினாலோ அல்லது போதி பூஜைகள் நடத்தினாலோ எந்தப் பயனும் இல்லை. மனைவியும் குழந்தைகளும் சென்று சாப்பிடச் சொல்ல வேண்டும். இது வெளியே சென்று வாய்ஸ் கட் கொடுத்து செய்யக்கூடிய காரியம் அல்ல. கணவரிடம் சாப்பிடச் சொன்னால் பிரச்சினைகள் முடிந்துவிடும்.
மற்றொன்று, நாட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனமான கொலைகள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அப்போது அவர் குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுதான் அவரது கடமை. அதுதான் சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனின் பொறுப்பு. அதன்படி செயல்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.