இணையம் மூலம் இயங்கும் சூதாட்டம் மற்றும் பந்தய வணிகங்களுக்கு எதிர்காலத்தில் வரி விதிக்க அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். தனது சமூக ஊடக கணக்கு மூலம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரதி அமைச்சர், இந்தத் துறை முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட பின்னரே வரி விதிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சூதாட்ட வணிகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்திற்கு இணங்க, எதிர்காலத்தில் அதற்கான ஒரு விசேட ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இதன் மூலம் தேவையான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படும். தற்போது எந்தவொரு ஒழுங்குபடுத்தலும் இன்றி இணையம் மூலம் நடைபெறும் சூதாட்ட விளையாட்டுகளால் அரசாங்கத்திற்கு இழக்கப்படும் பெரும் வருமானம் இங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், புதிய வரி விதிப்புகள் மூலம் ஈட்டப்படும் அந்தப் பணம் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பங்களிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வரி கொள்கைக்கு இணங்க, எதிர்காலத்தில் அத்தியாவசியப் பொருட்களுக்கான மறைமுக வரிகளின் அளவைக் குறைக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.