உள்நாட்டு மற்றும் மேற்கத்திய மருத்துவராக போலியாக நடித்து சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த ஒரு பெண் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்துப் பொருட்களை கொழும்பு துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்கு பணம் தேவை என்று கூறி, பல்வேறு நபர்களிடமிருந்து இந்த பெரும் தொகையை அவர் மோசடி செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸ் காவலில் உள்ள இந்த சந்தேகநபர் 53 வயதுடைய திருமணமாகாத பெண் ஆவார். அவர் முதலில் கிரிபாவ பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார், பின்னர் ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டுத் தொகுதியில் வசித்து வந்துள்ளார். மருத்துவராக நடித்து அவர் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான மருந்துகளை வழங்கியுள்ளார். அந்த மருந்துகள் நாட்டில் பயன்படுத்த எந்த அனுமதியும் பெறாத, தரமற்றவை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தான் ஒரு மருத்துவர் என்று கூறி, பல்வேறு பிரதேசங்களில் கிளினிக்குகளை நடத்தி மக்களிடமிருந்து பணம் பெற்றுள்ளார். தற்போது கம்பஹா, மதுராவல, பண்டாரகம, ஹொரணை, இங்கிரிய மற்றும் மில்லனிய ஆகிய பிரதேசங்களில் இருந்து அவரிடம் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்த பல நபர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோசடி நடவடிக்கைகளுக்கு வேறு ஒரு மருத்துவரின் உதவி சந்தேகநபருக்கு கிடைத்ததா என்பது தொடர்பாகவும் பொலிஸார் தற்போது விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேகநபர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்த மருத்துவ சின்னம் பொறிக்கப்பட்ட மோட்டார் வாகனத்தையும் பயன்படுத்தியுள்ளார். இருப்பினும், அவரது தொழில்முறை தகுதிகள் குறித்து பொலிஸார் இலங்கை மருத்துவ சபை மற்றும் ஆயுர்வேத மருத்துவ சபையிடம் மேற்கொண்ட விசாரணைகளில், அவர் எந்த மருத்துவ சபையிலும் பதிவு செய்யப்படாதவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்ததும், சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன் பிணை பெற முயற்சித்துள்ளார், ஆனால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, பொலிஸ் காவலில் இருந்து தப்பிப்பதற்காக அவர் பல்வேறு வாகனங்களை மாற்றி நீண்ட காலமாக தலைமறைவாக இருந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.