கணக்காளர் கணக்குகளைச் சரிபார்க்கும்போது பணப் பெட்டியின் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய சார்ஜென்ட் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்

the-sergeant-who-absconded-with-the-key-of-the-safe-while-the-accountant-was-checking-the-accounts-was-suspended

நுகேகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் பணம் மற்றும் அது தொடர்பான புத்தகங்களை பரிசோதனை செய்ய வந்த கணக்காளர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், பணப் பெட்டியின் சாவியையும் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் நிர்வாகப் பிரிவில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆவார்.




நுகேகொடை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மங்கல தெஹிதெனியவின் உத்தரவின் பேரில் இந்த சோதனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட கணக்காளர் மற்றும் அலுவலக அதிகாரிகள் கடந்த 03ஆம் திகதி வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு குறித்த பரிசோதனைக்காக வந்துள்ளனர். இந்த பரிசோதனை நடைபெறுவதை முன்கூட்டியே அறிந்த குறித்த சார்ஜன்ட், எந்தவித முன் அறிவிப்பும் அல்லது அனுமதியும் இன்றி பணப் பெட்டியின் சாவியையும் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் குறித்த சார்ஜன்ட் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், பணப் பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய 161,245 ரூபா பணம் அங்கு வைக்கப்படாமல் வேறு அறையில் இருந்த அலமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.




அரசாங்கப் பணத்தை உரிய அனுமதியின்றி உரிய பணப் பெட்டியில் வைக்காமல் வேறு இடத்தில் வைத்தமை மற்றும் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் அது பற்றி அறிவிக்காமல் அனுமதியின்றி பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (03) பி.எல்.ஏ. பிரசன்னவினால் குறித்த சார்ஜன்ட்டை பணி இடைநிறுத்தம் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post