மாடுகள் கத்தும் சத்தம் வெளியே கேட்காமல் தடுப்பதற்காக அவற்றின் வாய்களை இறுக்கமாகக் கட்டி, ஒரு சிறிய லாரியில் கடத்திச் சென்ற ஒருவரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரகம, கொத்தலாவல உயன்வத்த வீதியில் கடந்த 13ஆம் திகதி மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதுடன், இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாடு திருட்டு தொடர்பில் இதற்கு முன்னரும் பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஒருவராவார்.
பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட லாரியை பரிசோதித்தபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு வயதுடைய முரா வகையைச் சேர்ந்த ஒரு எருமை மாடு மற்றும் அதே வயதுடைய பிரீசியன் வகையைச் சேர்ந்த ஒரு பசு மாடு ஆகியவற்றை பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிந்தது. மூடப்பட்ட சிறிய லாரியில் விலங்குகள் கடத்தப்படுவதாக பண்டாரகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த இரண்டு விலங்குகளும் ஹோமாகம பிரதேசத்தில் உள்ள ஒரு இறைச்சிக் கடைக்கு பணத்திற்காக விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்தன என்பது தெரியவந்துள்ளது. பண்டாரகம, அளுத்கம பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேகநபர் வைத்திருந்த விலங்குகள் திருடப்பட்டவையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தீவின் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட செய்திகள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக விலங்குகளை கடத்தியமை மற்றும் விலங்கு வதை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.