அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் அமைந்துள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனமான டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் (Tufts University) பௌத்த ஆலோசகராக (Chaplain) பணியாற்றிய ஒரு இலங்கை பௌத்த பிக்கு, பணம் கொடுத்து பாலியல் சேவைகளைப் பெற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 'தி டஃப்ட்ஸ் டெய்லி' (The Tufts Daily) இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இவ்வாறு சட்டத்தின் பிடியில் சிக்கியவர் 32 வயதான மஹாயாய வினீத தேரர் என்ற பிக்கு ஆவார்.
அவர் 2024 டிசம்பர் மாதம் முதல் அந்த பல்கலைக்கழகத்தில் பௌத்த ஆலோசகர் பதவியை வகித்து வருகிறார்.போஸ்டன் காவல் துறையின் மனித கடத்தல் தடுப்புப் பிரிவால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு இரகசிய நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இந்த இலங்கை பௌத்த பிக்குவும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. போஸ்டன் பகுதியில் நடைபெறவிருக்கும் பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இலக்காகக் கொண்டு நிகழக்கூடிய வணிக ரீதியான பாலியல் வர்த்தகம் மற்றும் மனித கடத்தலைத் தடுக்கும் நோக்கில், காவல் துறையினர் இந்த சிறப்பு சோதனையை “ஆபரேஷன் ரெட் கார்ட்” (Operation Red Card) என்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது, பாலியல் சேவைகளை வழங்குபவர்களாக வேடமிட்ட தந்திரோபாய காவல்துறை அதிகாரிகள் இணையத்தில் வெளியிட்டிருந்த ஒரு போலி விளம்பரத்திற்கு மஹாயாய வினீத தேரர் உட்பட சந்தேக நபர்கள் பதிலளித்துள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு பாலியல் செயல்களைக் கோரி, அதற்காக அமெரிக்க டாலர் 125 முதல் 400 வரை பணம் செலுத்த ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் 'மோக்சி போஸ்டன் டவுன்டவுன்' (Moxy Boston Downtown) ஹோட்டலில் இந்த சோதனை நடத்தப்பட்டதுடன், கைது செய்யப்பட்டபோது சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்ட சரியான பணத்துடன் வந்திருந்ததாகவும் காவல்துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மஹாயாய வினீத தேரர் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் தான் வகித்து வந்த பௌத்த ஆலோசகர் பதவியில் இருந்து உடனடியாக விலகியுள்ளார். அவரது ராஜினாமா குறித்து கடந்த திங்கட்கிழமை தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று பல்கலைக்கழகத்தின் ஊடகத் தொடர்புகளுக்கான நிர்வாக இயக்குநர் பேட்ரிக் கொலின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தின் தலைமை ஆலோசகர் வணக்கத்திற்குரிய எலிஸ் நெல்சன் விங்கர் அம்மையார், ஆலோசகர் அலுவலகத்தின் செய்திமடல் மூலம், வரவிருக்கும் கோடைகாலத்தில் புதிய பௌத்த ஆலோசகரைத் தேடும் பணிகள் தொடங்கும் என்றும், ஆனால் தற்போதுள்ள அனைத்து பௌத்த ஆலோசனைத் திட்டங்களும் தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். தற்போது, பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தும் அவரது பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து பாலியல் சேவைகளைப் பெற முயன்ற ஒரு சிறிய குற்றத்தின் (Misdemeanor charge) கீழ் வினீத தேரருக்கு எதிராக தற்போது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், நீதிமன்றத்தில் தான் நிரபராதி என்று அவர் அறிவித்துள்ளார், மேலும் அவர் அடுத்த செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். இது தொடர்பாக வினீத தேரர் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர் கேத்தரின் குன்ட்ஸ்ஸிடம் ஊடகங்கள் வினவியபோது, அவர் இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.