தெரு நாய்களைத் தடிகளாலும் கம்புகளாலும் தாக்கிய வங்கிப் பெண்மணிக்கு பொலிஸ் பிணை

bank-lady-who-attacked-street-dogs-with-sticks-granted-police-bail

மகரகம, பதிரகொட வீதியில் சுற்றித் திரியும் தெருநாய்களை இலக்கு வைத்து கடுமையான கொடூரத்துடன் தாக்கிய சம்பவம் தொடர்பில் அரச வங்கியின் நிறைவேற்று தர அதிகாரியொருவர் மகரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.




இந்த மனிதாபிமானமற்ற செயல் கடந்த வெசாக் பௌர்ணமி தின இரவிலும் அதற்கு அடுத்த நாள் அதிகாலையிலும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இந்த பெண், வீதியில் இருந்த நாய்களை துரத்தி துரத்தி கம்புகளால் தாக்கியதுடன், ஒரு நாயை மோட்டார் சைக்கிளால் ஏற்றவும் முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய காட்சிகள் அருகிலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா (CCTV) அமைப்புகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அப்பாவியான விலங்குகளை துன்புறுத்த வேண்டாம் என பிரதேசவாசிகள் குறித்த பெண்ணுக்கு அறிவுறுத்தும் விதமும் அந்தக் காட்சிகளில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.




பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேகநபரான வங்கி அதிகாரிக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மகரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஹர்ஷ டி சில்வா அவர்களின் நேரடி பணிப்புரையின் பேரில், பல்வேறு முறைப்பாடுகள் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் லிஹினியாகுல அவர்களின் வழிகாட்டலில் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

Previous Post Next Post