
கல்வி கற்பதற்காக பெற்றோர்களால் விகாரையொன்றில் ஒப்படைக்கப்பட்ட பத்து வயது சிறுவன் ஒருவரை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக கலென்பிந்துனுவெவ, சிவலாக்குளம் பிரதேச விகாராதிபதி பிக்கு ஒருவருக்கு 24 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் குற்றங்கள் தொடர்பான அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ருவன் தம்மிக திசாநாயக்க அவர்களால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
பிரதிவாதி பிக்கு மீது சுமத்தப்பட்டிருந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக தனித்தனியாக தலா 12 வருடங்கள் என இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 5 இலட்சம் ரூபா நஷ்டஈடு (ஒரு குற்றச்சாட்டுக்கு இரண்டரை இலட்சம் ரூபா வீதம்) செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த நஷ்டஈட்டு தொகையை செலுத்த தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனையும், 3000 ரூபா அபராதமும் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் பிரதிவாதி மேலும் ஒரு வருட சிறைத்தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.
இந்த குற்றம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதிக்கும் 24 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் கலென்பிந்துனுவெவ சிவலாக்குளம் ஸ்ரீ சீவலி சைத்தியாராம விகாரையில் இடம்பெற்றுள்ளது. சட்டமா அதிபரால் இலங்கை தண்டனைச் சட்டக்கோவையின் 365 அ (2) அ பிரிவின் கீழ் 40 வயதுடைய விகாராதிபதிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டாளர் சார்பில் அரச சட்டத்தரணி சமிக்க குருகே ஆஜராகியிருந்ததுடன், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் முன்னாள் விசேட சட்ட வைத்திய அதிகாரி ஹர்ஷன மகேந்திர குமார சேனாநாயக்க, கலென்பிந்துனுவெவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆகியோர் இதில் பிரதான சாட்சிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
வழக்கு விசாரணையின் போது பிரதிவாதி பிக்கு தொடர்ச்சியாக நீதிமன்றத்தை தவிர்த்து தப்பிச் சென்று மறைந்திருந்ததால், பிரதிவாதி இன்றி வழக்கு விசாரிக்கப்பட்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட தினத்திலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், பிரதிவாதியை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவித்து கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்க மேல் நீதிமன்ற நீதிபதி நடவடிக்கை எடுத்தார்.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்த பிக்கு தனது இல்லற வாழ்க்கையின் போதும் வீடுடைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைகளைப் பெற்றிருந்த ஒரு முன்னாள் குற்றவாளி என்பதும் நீதிமன்ற விசாரணையின் போது மேலும் தெரியவந்துள்ளது.