சமுர்த்தி வங்கி கணக்காய்வுக்கு சட்டங்கள் இல்லையாம்

samurdhi-bank-audit-has-no-rules

சமுர்த்தி வங்கிகளை தணிக்கை செய்வதற்கான ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பு இதுவரை உருவாக்கப்படவில்லை என்று தணிக்கை அதிகாரிகள் அரச நிதி தொடர்பான குழுவுக்கு அறிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் சம்பந்தப்பட்ட குழு கூடியபோது இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.

அதன்படி, சமுர்த்தி வங்கிகள் மற்றும் சங்கங்களைத் தணிக்கை செய்வதற்கான பொருத்தமான வழிமுறையை முன்மொழியுமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அங்கு அறிவுறுத்தியுள்ளார்.




2025ஆம் ஆண்டுக்கான தணிக்கை நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான தணிக்கைகள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் அங்கு சுட்டிக்காட்டினர். இருப்பினும், அந்த தணிக்கை நடவடிக்கைகளை வெளித்தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான கொள்முதல் செயல்முறை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த பணிகளுக்கு சுமார் 300 அதிகாரிகள் தேவை என மதிப்பிடப்பட்டிருந்தாலும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் 200 அதிகாரிகளை நியமிப்பது போதுமானது என்று கணக்காய்வு அதிபதி குழுவிடம் விளக்கினார்.

இது தவிர, 'ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா' (Rebuilding Sri Lanka) திட்டத்துடன் தொடர்புடைய கணக்குகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒரு சட்டரீதியான நிதி அல்ல என்றும், இது திறைசேரி பிரதிச் செயலாளரின் கீழ் உள்ள ஒரு கணக்கு மட்டுமே என்றும் தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும், இந்த கணக்கு மூலம் இதுவரை எந்தவித கொடுப்பனவுகளும் செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்ததுடன், இதனை ஒரு சட்டரீதியான நிதியாக மாற்றுவதற்கான தேவை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.




இதற்கிடையில், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் இந்த ஆண்டுக்கான வருடாந்த திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும் அரச நிதி தொடர்பான குழுவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணக்காய்வு அதிபதி சமுதிகா ஜயரத்ன அம்மையார் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் சம்பந்தப்பட்ட விடயங்கள் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

Post a Comment

Previous Post Next Post