
மெதகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தில் வசித்து வந்த நாற்பது வயதுடைய ரினோஷா உம்மா என்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் நேற்று (07) அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது கணவரால் அவரது உடலில் பெற்றோல் ஊற்றி தீ வைத்த பின்னர் பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களுடன் இரவு உணவு உண்ட பின்னர் இந்த தம்பதியினர் ஒரு அறையிலும் பிள்ளைகள் வேறு அறையிலும் உறங்கச் சென்றுள்ளனர். பின்னர் அதிகாலை நேரத்தில் தாயும் தந்தையும் உறங்கிக் கொண்டிருந்த அறையிலிருந்து தீ விபத்து ஏற்படுவதைக் கண்ட பிள்ளைகள் உடனடியாக செயல்பட்டு கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது தங்கள் தாய் தீயில் சிக்கி எரிவதைக் கண்ட அவர்கள் பெரும் முயற்சி செய்து தீயை அணைத்து உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். எவ்வாறாயினும், பலத்த தீக்காயங்களுடன் இருந்த அந்தப் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த துயர சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உயிரிழந்த பெண்ணின் கணவர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கோழி இறைச்சி விற்பனை நிலையத்தை நடத்தி வரும் ஒரு வர்த்தகரான இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதாலேயே இந்த குற்றம் நடந்திருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான நீதிவான் விசாரணையுடன் மரணப் பரிசோதனையும் நேற்று (07) பிபில ஆதார வைத்தியசாலையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரான கணவரைக் கைது செய்வதற்காக மெதகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபாத் திசாநாயக்கவின் தலைமையில் தற்போது விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.