நீர்கொழும்பு சிறைச்சாலை வளாகத்தில் இன்று (06) ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 08 ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவத்துடன் நிலைமை மோசமடைந்துள்ளதாகவும், வன்முறைச் செயல்கள் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை எழுபதாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை வட்டாரங்களின்படி, உயிரிழந்தவர்களில் சிறைச்சாலையில் கடமையாற்றும் ஒரு ஜெயிலர் மற்றும் இரண்டு சிறைக்காவலர்களும் அடங்குவர். மேலும், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 கைதிகளும் இந்த மோதல் காரணமாக உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் இருவர் நேற்று உயிரிழந்தனர்.
சிறைச்சாலைக்குள் நிலவும் கடுமையான சூழ்நிலையை அவதானிப்பதற்காக இலங்கை விமானப்படையால் ஒரு ட்ரோன் விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், சிறைச்சாலைக்குள் இருந்து அந்த விமானத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகரித்த அமைதியின்மையைக் கட்டுப்படுத்தி நிலைமையை சீர்செய்வதற்காக விமானப்படைக்கு சொந்தமான ஒரு ஹெலிகொப்டர் விமானமும் அந்த வான் எல்லைக்கு வரவழைக்கப்பட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டமை அவதானிக்கப்பட்டது.