ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள நீதிமன்றம் ஒன்று, தனது 15 நோயாளிகளைக் கொன்ற குற்றத்திற்காக 41 வயதுடைய ஒரு நோய்த்தணிப்பு சிகிச்சை (palliative care) மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஜேர்மன் தனியுரிமைச் சட்டங்களின்படி 'ஜோஹன்னஸ் எம்.' (Johannes M.) என அடையாளம் காணப்பட்ட இந்த மருத்துவர், 2021 செப்டம்பர் மற்றும் 2024 ஜூலை மாதங்களுக்கு இடையில் 12 பெண்களையும் மூன்று ஆண்களையும் இவ்வாறு கொன்றது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த கொலைகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.இந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் 25 முதல் 94 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தாலும் உடனடி மரண ஆபத்தில் இருக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. மருத்துவர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று, நோயாளிகளின் விருப்பமின்றி ஆபத்தான மருந்து கலவைகளை உடலில் செலுத்தி இந்தக் கொலைகளைச் செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் தனது குற்றங்களை மறைப்பதற்காக பல சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கவும் முயன்றுள்ளார்.
அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, அதாவது 2024 ஜூலை மாதத்தில் ஒரு நாளில் மட்டும் இரண்டு நோயாளிகளைக் கொன்றார். மத்திய பெர்லினில் உள்ள ஒரு வீட்டில் 75 வயதுடைய ஒரு ஆண் மற்றும் சில மணிநேரங்களுக்குப் பிறகு அருகிலுள்ள மாவட்டத்தில் வசித்த 76 வயதுடைய ஒரு பெண் ஆகியோர் கொல்லப்பட்டனர். அங்கு, அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்து ஆதாரங்களை அழிக்க அவர் முயன்றார், ஆனால் அது தோல்வியடைந்தது. ஒரு வருட கால விசாரணையின் பெரும்பகுதி அமைதியாக இருந்த மருத்துவர், கடந்த மாதம் 12 தீவிர நோயாளிகளைக் கொன்றதை ஒப்புக்கொண்டார். அவர்களின் துயரத்தையும் பலவீனத்தையும் நீக்கி அனைவருக்கும் நன்மை செய்யவே அவ்வாறு செய்ததாகவும், தான் செய்த அனைத்து துன்புறுத்தல்களுக்கும் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் அப்போது கூறினார்.
இந்த மருத்துவர் தொடர்பான மேலும் 76 சந்தேகத்திற்கிடமான மரணங்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டால், இது ஜேர்மன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய தொடர் கொலைச் சம்பவங்களில் ஒன்றாக இருக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மிகுந்த வருத்தத்துடன் கருத்து தெரிவித்தனர். 2021 இல் இறந்த 25 வயதுடைய இளைய பெண்ணின் தாய் கண்ணீருடன் தனது மகளுக்கு ஒருபோதும் வாழ்க்கை சலித்ததில்லை என்று கூறினார். மேலும், 2024 இல் இறந்த 72 வயதுடைய ஒரு பெண்ணின் மகன், தனது தாய்க்கு தனது சகோதரியுடன் பயணம் செய்ய திட்டங்கள் இருந்ததாகவும், அவர் தொடர்ந்து வாழ மிகவும் விரும்பியதாகவும் தெரிவித்தார்.
மருத்துவரின் குற்றத்தின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை காலம் முடிந்த பின்னரும் பொதுப் பாதுகாப்பிற்காக அவரை தொடர்ந்து தடுப்புக் காவலில் வைக்க (preventive detention) உத்தரவிட்டது. மேலும், அவர் மீண்டும் ஒருபோதும் மருத்துவத் தொழிலில் ஈடுபட முடியாதவாறு ஆயுட்கால தொழில் தடை ஒன்றையும் நீதிமன்றம் அறிவித்தது.