அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்குடன், ஓய்வுபெறவிருக்கும் அதிகாரிகளுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு அமர்வுகள் தொடர் நாளை (09) முதல் ஆரம்பிக்கப்படும் என ஓய்வூதியத் திணைக்களம் அறிவித்துள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறவிருக்கும் அனைத்து அரசு ஊழியர்களையும் இலக்காகக் கொண்டு செயல்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், ஓய்வூதிய விண்ணப்ப செயல்முறையை சரியாகப் பூர்த்தி செய்தல், தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாரித்தல் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் அமர்வு நாளை (09) முற்பகல் 9.30 மணி முதல் 11.30 மணி வரை Microsoft Teams மூலம் நடைபெறும்,ஓய்வூதியத்தைப் பெறுவதில் அதிகாரிகளின் பொறுப்புகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இங்கு விளக்கப்படவுள்ளது. அரசு ஊழியர்களின் தேவைக்கேற்ப இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் தமிழ் மொழி அமர்வு ஒன்றும் எதிர்காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விரைவில் ஓய்வுபெறவிருக்கும் அனைத்து அரசு ஊழியர்களும் இந்த விழிப்புணர்வு அமர்வுகளில் கலந்துகொள்ளுமாறு அத்திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.