15 லட்சம் இலஞ்சம் வேண்டாம் என்ற பொலிஸ் அதிகாரிக்கு டுபாயில் இருந்து மரண அச்சுறுத்தல்கள்

death-threats-from-dubai-to-the-police-officer-who-refused-the-15-lakh-bribe

கட்டான பிரதேசத்திலிருந்து மோட்டார் காரில் பொலன்னறுவைக்கு ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற இளம் தம்பதியினர் கைது செய்யப்பட்டதையடுத்து, குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் டுபாயிலிருந்து மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்களைக் கைது செய்த அதிகாரியை இலக்கு வைத்து இந்த தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்தனர்.




இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிக்கு முதலில் பதினைந்து இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க இந்த தொலைபேசி அழைப்பு மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த அதிகாரி அந்த இலஞ்சப் பணத்தை நேரடியாக நிராகரித்ததையடுத்து, டுபாயிலிருந்து பேசிய நபர், அவரையும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலன்னறுவை ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த 12ஆம் திகதி மாலை இந்த விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டது. கட்டான பிரதேசத்திலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற மோட்டார் கார் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அதில் விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 78 கிராம் 780 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.




இங்கு கைது செய்யப்பட்ட இளம் தம்பதியினர் 21 மற்றும் 24 வயதுடைய கட்டான மற்றும் குலியாபிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் நேரடி பணிப்புரையின் பேரில், தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி. பி. கே. பத்திரண, பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. சந்திரசேகர மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திக்க கலேவெல உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்த வெற்றிகரமான சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post