இந்தியாவின் நாகாலாந்து மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களைப் பாதித்த கனத்த பருவமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை பதிவான இந்த அனர்த்த நிலைமையுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 8 பேர் மியான்மர் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வடகிழக்கு நாகாலாந்து மாநிலத்தில் இருந்து பதிவாகியுள்ளனர், மற்ற 11 பேர் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியிலிருந்து பதிவாகியுள்ளனர்.நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் மாஜிஸ்திரேட் வென்யெய் கொன்யாக் வெளிநாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த எட்டு பேரில் நான்கு பேரின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அனர்த்தத்தில் சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஜம்மு பிராந்தியத்தின் ராஜௌரி மாவட்டத்தைப் பாதித்த பாரிய வெள்ள நிலைமை குறித்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். வெள்ளம் காரணமாக பேருந்து நிலையம் உட்பட பல பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு பிராந்தியத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் இந்திய என்.டி.டி.வி செய்தி சேவை தெரிவித்துள்ளது. இருப்பினும், இராணுவம் மற்றும் மாநில அவசரகால மீட்புக் குழுக்கள் இணைந்து ஐந்து சிறுவர்கள் உட்பட 11 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் மேலும் மிகக் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது. மோசமான வானிலை மற்றும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, காஷ்மீரின் வருடாந்திர இந்து அமர்நாத் யாத்திரையையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வானிலை சீரடைந்து சாலைகள் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னர் அது மீண்டும் தொடங்கும் என்று அரசு அறிவித்தது. மேலும், மில்லியன் கணக்கான பக்தர்கள் வருகை தரும் ஜம்முவில் உள்ள வைஷ்ணோ தேவி யாத்திரையும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பருவமழை காலத்தில் இத்தகைய வெள்ளம் மற்றும் அனர்த்த நிலைமைகள் ஆண்டுதோறும் பொதுவாகக் காணப்படுகின்றன.