இலங்கையின் 35வது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடலுக்கான இறுதிச் சடங்குகள் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் நாளை (20) இடம்பெறவுள்ளன.
ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் காலமான சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யு. வூட்லர் தெரிவித்தார்.முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் தற்போது கொழும்பு, பொரளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஜயரத்ன ரெஸ்பெக்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (19) முதல் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
சி.டி. விக்ரமரத்ன கடந்த முன்தினம் (17) காலை தனது வீட்டில் சுடப்பட்டு உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், தனது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது.
கிழக்கு கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் பூதவுடலுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன், அதில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் உடற்பாகங்கள் மேலதிக பரிசோதனைகளுக்காக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவும் மாலபே பொலிஸாரும் இணைந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியும் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.