2022 ஆம் ஆண்டில் ஏழு வயது சிறுவனை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு குற்றச்சாட்டுகளுக்காக குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 41 வயது நபருக்கு 28 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து, அந்த தண்டனையை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கும்படி பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராமன் ட்ரொஸ்கி அண்மையில் உத்தரவிட்டார்.
குடாலுணுக்க பிரதேசத்தில் வசித்து வந்த விஜேதுங்க முதியன்சேலாகே பிரேமரத்ன அல்லது 'சாந்த மாமா' என அழைக்கப்படும் திருமணமாகாத ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளில், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வீதம் மொத்த குற்றச்சாட்டுகளுக்கும் இருபதாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்தை செலுத்தத் தவறினால், ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா மூன்று மாதங்கள் சாதாரண சிறைத்தண்டனையை அனுபவிக்க நேரிடும்.
மேலும், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான குழந்தைக்காக இரண்டரை இலட்சம் ரூபாய் நஷ்டஈடு செலுத்த வேண்டும் என்றும், அந்த நஷ்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார். ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், அப்போதைய மஹியங்கனை பிரிவின் பொறுப்பதிகாரியான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.எஸ். பலிபானவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.சி. வீரகோன் மற்றும் பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஜனீதா (1751) உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு பிரதிவாதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.