
சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் தொகுதியை மாத்திரைகளாகத் தயாரித்து உடலுக்குள் மறைத்து வைத்துக்கொண்டு நாட்டிற்கு வந்த ஆபிரிக்கப் பெண் ஒருவரை சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் கடந்த 17ஆம் திகதி இரவு கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அங்கோலா நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய ஆசிரியை ஆவார்.
விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் தான் எச்.ஐ.வி. (HIV) தொற்றுக்குள்ளானவர் என அவர் தெரிவித்துள்ளார்.அதிக உடல் பருமன் கொண்ட இந்த சந்தேகநபர், சக்கர நாற்காலியின் உதவியுடன் கட்டுநாயக்க விமான நிலைய சோதனைகளைத் தவிர்த்து வெளியேற முயன்றுள்ளார். சுமார் 50 கொக்கைன் அடங்கிய மாத்திரைகளை விழுங்கிவிட்டு அங்கோலாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு வந்த அவர், பின்னர் கட்டார் நாட்டின் தோஹா நகரத்தை அடைந்துள்ளார். அதன்பின்னர் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான QR - 654 இலக்க விமானத்தில் அன்றைய தினம் மாலை 06.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தான் எச்.ஐ.வி. (HIV) தொற்றுக்குள்ளானவர் என சுங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அவரைப் பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பின்னர் அவரது வயிற்றில் உள்ள போதைப்பொருள் மாத்திரைகளை வெளியே எடுக்கும் நோக்குடன் அவர் உடனடியாக நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வழங்கப்பட்ட சிகிச்சைகள் மூலம் 19ஆம் திகதி காலைக்குள் அவரது உடலில் இருந்து 50 கொக்கைன் மாத்திரைகளை வெளியே எடுக்க மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எய்ட்ஸ் நோய் வந்ததாகக் கூறியது பொய் என்பதும் தெரியவந்துள்ளது. இருப்பினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்-கதிர் (X-Ray) மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் (Scan Tests) மூலம் அவரது வயிற்றில் மேலும் சில போதைப்பொருள் மாத்திரைகள் தங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய மாத்திரைகளையும் உடலில் இருந்து வெளியே எடுப்பதற்காக நீர்கொழும்பு மருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் சந்தேகநபருக்கு மலமிளக்கி மருந்துகளை வழங்கி மேலதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.