ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்சவை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (15) உத்தரவிட்டார். தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தி அரசுக்கு 9 மில்லியன் ரூபா நிதி இழப்பை ஏற்படுத்தியதே இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டாகும்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதன் பின்னர் இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சரத் வீரவன்ச சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட உடனேயே அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை விதிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதோடு, அந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டார். இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவரை சந்தேகநபராகப் பெயரிட்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தபோது, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த அரச வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உட்பட மேலும் இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர், அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.