மாணவர் ஒருவரால் தீ வைக்கப்பட்ட கார் தொடர்பில் பொலிஸ் அறிக்கை

a-police-announcement-about-the-car-that-a-student-sets-on-fire

குருநாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் மற்றும் அதற்கு அருகில் ஒரு மாணவர் நடந்து செல்லும் காட்சி அடங்கிய காணொளி ஒன்று இந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த காட்சிகள் அடங்கிய காணொளியில், சம்பந்தப்பட்ட மாணவர் காரை தீவைத்து எரித்ததாகக் குறிக்கும் வகையிலான ஒரு ஒலிப்பதிவும் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளது.




பொலிஸார் தெரிவித்தபடி, இந்த தீ விபத்து குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. குருநாகல் பொலிஸ் நிலையத்தால் வழங்கப்பட்ட அறிக்கைகளின்படி, கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் சுமார் 140 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் ஒன்று தீயில் அழிந்துள்ளதுடன், இதற்கு ஒரு மாணவரே பொறுப்பு எனத் தெரிவித்து பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த குருநாகல் பொலிஸார், குறித்த கார் தீப்பிடித்த போது அதற்கு அருகில் சென்ற மாணவர் அதே கல்லூரியில் கல்வி கற்கும் ஒருவர் என அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும், சமூக ஊடகங்களில் பரப்பப்படுவது போல, இந்த மாணவரால் கார் தீவைக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் எந்த ஒரு நேரில் கண்ட சாட்சியமோ அல்லது ஆய்வுச் சாட்சியமோ இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.




குருநாகல் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பான விடயங்களை ஏற்கனவே நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்டன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கார் தீப்பிடித்ததற்கான சரியான காரணத்தைக் கண்டறிய அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்தின் மூலம் நிபுணர் சாட்சியங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post