
ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தின் பின்னர், முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அறிவுறுத்தல்கள் மற்றும் அறிவித்தலின் பேரில் ஒரு சாரதியை பொலிஸில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, முன்னாள் அமைச்சரின் அப்போதைய தனிப்பட்ட உதவியாளராக கடமையாற்றிய ஹர்ஷ பண்டார திலகசிறி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜூன் 25ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது அவர் இதனை வெளிப்படுத்தினார்.
விபத்து நடந்ததாகக் கூறப்படும் 2016 பெப்ரவரி 28ஆம் திகதி இரவு, தான் தனது வெளிநாட்டு காதலியான லீ என்ற பெண்ணுடனும், சாரதி அல்விஸுடனும் பொரலஸ்கமுவ நடைபாதை பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்ததாக சாட்சியாளர் தெரிவித்துள்ளார். அப்போது, பிரதிவாதி சம்பிக்க ரணவக்க, சாரதி அல்விஸுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து விபத்து ஒன்று நடந்துள்ளதாகத் தெரிவித்ததோடு, உடனடியாக பொரளை பொலிஸில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தானும் முன்னாள் அமைச்சருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக ஹர்ஷ பண்டார தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர், "ஒரு விபத்து நடந்தது, ஒரு சாரதியை பொலிஸுக்கு அனுப்புங்கள்" என்று தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பொரலஸ்கமுவிலிருந்து பொரளை பகுதிக்கு சாரதி அல்விஸை அனுப்புவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், அவருக்குப் பதிலாக துசித என்ற மற்றொரு சாரதியை பொலிஸுக்கு அனுப்ப தான் நடவடிக்கை எடுத்ததாகவும் சாட்சியாளர் கூறினார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு தான் மீண்டும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வந்ததாகவும், அப்போது முன்னாள் அமைச்சர் அங்கேயே இருந்ததாகவும் சாட்சியாளர் மேலும் குறிப்பிட்டார். உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த முன்னாள் அமைச்சரைப் பார்த்தபோது, அவர் ஒருவித அமைதியற்ற அல்லது மிகுந்த பதட்டமான நிலையில் இருந்ததை தெளிவாகக் காண முடிந்ததாகவும் ஹர்ஷ பண்டார திலகசிறி மேல் நீதிமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.