நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் கைதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலுக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் ‘கட்டுவெல்லேகம சுரேஷ்’ என்ற பிரபல குற்றவாளியை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் காலி பூஸ்ஸ அதி பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான ‘கெஹெல்பத்தார பத்மே’வின் நெருங்கிய கூட்டாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள இவர், கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பல கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் ஆவார்.
இது தவிர, 2016 ஆம் ஆண்டு நாரம்மல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் தாதுகோபுரத்திற்கு சேதம் விளைவித்தமை, அங்கு தங்கியிருந்த பிக்கு ஒருவருக்கும் உதவியாளர் ஒருவருக்கும் கொடூரமாகத் தாக்கி கட்டிவைத்தமை தொடர்பாகவும் இவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.இந்த சந்தேக நபருக்கு எதிராக நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் நீதவான் நீதிமன்றத்திலும் வழக்குகள் விசாரணையில் உள்ளதால், அவர் இதுவரை நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். குறுகிய கால கைதிகள் மற்றும் 2,400க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் பல்வேறு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சுமார் 26 உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலைமை காரணமாக கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் அங்கு கடுமையான அமைதியற்ற சூழல் ஏற்பட்டது.
அங்கு ஏற்பட்ட பயங்கரமான மோதல் நிலைமை காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேர் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல்கள் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருபது பேர் கடுமையான நிலையில் அவசர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்று (07) காலை இலங்கை இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். அதன் உள் மற்றும் வெளிப் பாதுகாப்பை பலப்படுத்தி, சிறைச்சாலைக்குள் ஏற்பட்டிருந்த கலவர நிலைமையை முழுமையாகக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தற்போது வெற்றி பெற்றுள்ளனர்.