முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ உள்ளிட்ட மூவர் மீது இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரங்கள் இன்று (07) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரதிவாதிகளிடம் கையளிக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டதோடு, அதன்பின்னர் பிரதிவாதிகளை பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி, ஒவ்வொரு பிரதிவாதிக்கும் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் விதிக்கப்பட்டதுடன், வழக்கு விசாரணை முடியும் வரை அவர்கள் அனைவரினதும் வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தது.இந்த ஊழல் வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக சேபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி பண்டார கோட்டகம ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி இலஞ்ச ஆணைக்குழுவினால் இந்த நபர்களுக்கு எதிராக பத்து குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அதனுடன் தொடர்புடைய முப்பது சாட்சிகளும் பெயரிடப்பட்டிருந்தனர். இதற்கிடையில், வழக்கு தொடர்பான முன் விசாரணை மாநாட்டை அடுத்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடத்த தீர்மானித்த மேல் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் இந்த வழக்கை மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு 2022 மே மாதம் 09ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட போராட்ட சூழ்நிலைக்கு மத்தியில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அங்கு இலங்கை மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான செவனகல, கிரிஇப்பன்பாவ பிரதேசத்தில் அமைந்துள்ள காணியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடம் உட்பட பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. இந்த சட்டவிரோத கட்டுமானங்களுக்கான நட்டஈட்டுப் பணத்தை அரசு செலுத்த மறுத்த போதிலும், அதற்கு மாறாக செயல்பட்டு, நட்டஈட்டுக்கான அலுவலகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு தங்கள் உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி அழுத்தம் கொடுத்ததாக பிரதிவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு செல்வாக்கு செலுத்தி, எண்பத்தெட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (ரூ. 8,850,000/-) நட்டஈட்டுப் பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து அரச பணத்தை இவ்வாறு பெற்றுக்கொண்டதன் மூலம் ஊழல் எனும் குற்றத்தைச் செய்தமை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றங்களின் கீழ் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.