
சட்டவிரோத அமைப்புகளின் குற்றவாளியும், போதைப்பொருள் கடத்தல்காரருமான 'ஹரக்கட்டா' என்ற நதுன் சிந்தகாவிடம் இருந்து 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று (17) உத்தரவிட்டது. முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, சஜித் ஜன பலவேகயவின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் அருண வருணஹென்னதிகே ஆகியோரே இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்களாவர்.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் சட்டப் பணிப்பாளர் அனுஷா சம்பந்தப்பெருமா, சந்தேக நபர்களுடன் தொடர்பு வைத்திருந்த ஒரு பௌத்த பிக்கு குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். சந்தேக நபர்கள் பெற்ற லஞ்சப் பணத்தின் ஒரு பகுதி இந்த பிக்கு மூலம் சில உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பெயரிடப்பட்ட நபர்களிடையே மட்டும் 1,300க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் பரிமாறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும், இந்த லஞ்சப் பணப் பரிமாற்ற சம்பவத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதோடு, பணத்தை விநியோகிக்க உதவியதாக கூறப்படும் பௌத்த பிக்கு யார் என்பதும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், அடுத்த ஒரு தினத்தில் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இது தவிர, இந்த மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக வேறு ஒரு லஞ்சப் பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதுடன், அது தொடர்பாகவும் தற்போது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பங்கள் மற்றும் இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதவான், பிணை தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதி அறிவிக்கப்படும் வரை சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.