டெங்கு காரணமாக கொழும்பு பல்கலைக்கழகமும் மூடப்பட்டது.

colombo-university-is-also-closed-due-to-dengue

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களிடையே டெங்கு நோய் பரவியதன் காரணமாக, சில பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஒரு வார காலத்திற்கு இணையவழி (Online) மற்றும் கலப்பு (Hybrid) முறைகளில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கலை, சட்டம், முகாமைத்துவம், கல்வி மற்றும் விஞ்ஞான பீடங்களின் விரிவுரைகள் இவ்வாறு தகவல் தொழில்நுட்ப முறைகள் மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க அவர்கள் தெரிவித்தார்.




தற்போது பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்களுக்கு டெங்கு நோய் தொற்றியுள்ளதுடன், அவர்களில் ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பதிவான நோயாளிகளில் பெரும்பாலானோர் விஞ்ஞான மற்றும் கலைப் பீடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வி நடவடிக்கைகளைத் தொடர்வதில் கவனம் செலுத்தி பல்கலைக்கழக நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. டெங்கு நோயிலிருந்து குணமடைய ஓய்வு அத்தியாவசியமான காரணியாக இருப்பதால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வாய்ப்பளிக்கும் வகையிலும், கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் இந்த மாற்று விரிவுரை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அத்துடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் உடல்நிலை குறித்தும் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலைமை கட்டுக்குள் இருப்பதாக உறுதிப்படுத்தும் துணைவேந்தர், எந்தவொரு மாணவருக்கும் காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுமாறு மாணவர் சமூகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.




இந்த சுகாதார நிலைமை காரணமாக கொழும்பு பல்கலைக்கழகம் விரிவுரைகளை நிறுத்திவிடவில்லை என பேராசிரியர் இந்திக்க கருணாதிலக்க அவர்கள் குறிப்பாக வலியுறுத்தினார். அத்துடன், எதிர்காலத்தில் பல்கலைக்கழகத்தை முடக்கும் எந்தவொரு எதிர்பார்ப்போ அல்லது தயார்ப்படுத்தலோ இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post