இலங்கையில் மின்சாரத்தில் இயங்கும், செங்குத்தாக புறப்பட்டு தரையிறங்கக்கூடிய (eVTOL) பயணிகள் ட்ரோன் விமானச் சேவைகளை ஆரம்பிப்பதில் கவனம் செலுத்தி, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) மற்றும் 'EHang Intelligent' நிறுவனம் இடையே ஒரு விசேட தொழில்நுட்ப கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பல முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில், நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையில் இணையவுள்ள இந்தத் தொழில்நுட்பத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாகக் கருத்துகள் பரிமாறப்பட்டன.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பொறியியலாளர் ஜனித்த ருவன் கொடிதுவக்கு அவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரண்டாவது சந்திப்பு, நவீன விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பங்களை பாதுகாப்பான மற்றும் முறையான வழியில் நாட்டிற்கு அறிமுகப்படுத்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டத்தின் மற்றொரு வெற்றிகரமான படியாகும். இங்கு EHang Intelligent நிறுவனம் தனது நவீன தொழில்நுட்ப திறன்களை வெளிப்படுத்தியதுடன், சீன சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்திடம் (CAAC) இருந்து 'Type Certificate' சான்றிதழைப் பெற்ற உலகின் முதல் eVTOL உற்பத்தியாளர் என்ற வகையில் தான் அடைந்த சர்வதேச வெற்றியையும் இங்கு விளக்கினார்.
எதிர்காலத்தில் இலங்கையில் வணிக eVTOL சேவைகளை வெற்றிகரமாக நிறுவும் நோக்குடன், நாட்டில் eVTOL 'Regulatory Sandbox' ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்கவும் அந்த நிறுவனம் இங்கு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு, கண்காட்சிகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளுக்கு தேவையான வசதிகளை வழங்குவதன் மூலம், எதிர்கால வணிக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு ஒரு முறையான மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்ட பாதையை உருவாக்குவது எதிர்பார்க்கப்படுகிறது.