மாத்தறை, திஹகொட, பலோல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஒரு விகாரையின் போதி மரத்தடியில் அமைந்துள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு வெளிநாட்டவர்களின் சடலங்கள் 16ஆம் திகதி மாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மத வழிபாடுகளுக்காக விகாரைக்கு வந்த பிரதேசவாசிகள் சிலர் இந்த சடலங்களைக் கண்டு உடனடியாக திஹகொட பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் ஒருவரும், 52 வயதுடைய ஸ்கொட்லாந்து நாட்டவர் ஒருவருமாவர். இவர்கள் இருவரும் வெலிகம, மிதிகம குருபபில பிரதேசத்தில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும், அன்றைய தினம் காலை ஹம்பாந்தோட்டை பிரதேசத்திற்கு செல்வதாக கூறி அந்த விடுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் மற்றும் ஒரு ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அது வெலிகம பிரதேசத்திலிருந்து வாடகை அடிப்படையில் பெறப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு வெளிநாட்டவர்களும் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது, ஆனால் அவர்கள் இத்தகைய முடிவை எடுக்க காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளனடன், மாத்தறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரவின் அறிவுறுத்தலின் பேரில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.