காலி மஹமோதர பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகத்தை தற்காலிகமாக சிறைச்சாலையாகப் பயன்படுத்த எடுக்கப்பட்ட முடிவு குறித்து மறுபரிசீலனை செய்வது தொடர்பில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று (28) மாலை நடைபெற்ற காலி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை அங்குள்ள கைதிகளை மஹமோதர மற்றும் போகம்பரை தற்காலிக முகாம்களில் தடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், அது ஒரு நிரந்தர சிறைச்சாலையாக மாற்றப்படாது என்பதை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும், இந்த மஹமோதர மருத்துவமனை வளாகத்தை சிறைச்சாலையாக நிறுவ எடுத்த ஆரம்ப முடிவு மீண்டும் ஆராயவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதிர்கால காலி நகர அபிவிருத்தித் திட்டத்தின்படி மஹமோதர பிரதேசம் ஒரு விசேட நிர்வாக வலயமாக மேம்படுத்தப்படவுள்ளது. அதன் கீழ் காலி பொலிஸ் நிலையம் மற்றும் பிரதான தபால் அலுவலகம் உட்பட 18 அரச நிறுவனங்கள் அந்த வளாகத்திற்கு மாற்றப்படவுள்ளதுடன், தற்போதுள்ள காலி சிறைச்சாலை பூஸ்ஸ பிரதேசத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மஹமோதர பழைய மகப்பேறு மருத்துவமனை வளாகத்தை சிறைச்சாலையாகப் பெயரிட்டு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார அவர்களால் அண்மையில் ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், குறித்த சட்டத்தின் நோக்கங்களுக்காக இந்த மருத்துவமனை வளாகம் சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டது.