டிஜிட்டல் தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள் மற்றும் உடனடி தகவல் தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்தும் தற்போதைய யுகத்தில் கூட, புதிய தலைமுறையினரிடையே வாசிப்பு கலாச்சாரத்தை உருவாக்குவது மிகவும் அத்தியாவசியமானது என்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கல்வி, படைப்பாற்றல், கலாச்சாரம் மற்றும் கலைத் துறைகளில் முதலீடு செய்வது தேசிய அபிவிருத்தியில் இருந்து வேறுபட்டதல்ல, மாறாக அது தேசிய அபிவிருத்தியின் அத்தியாவசிய அடித்தளம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜூலை 24 அன்று கொழும்பில் ஆரம்பமான 'கொழும்பு இலக்கிய விழா'வில் உரையாற்றிய போதே பிரதமர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். ஜூலை 24 முதல் 29 வரை ஆறு நாட்கள் நடைபெறும் இந்த இலக்கிய விழாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், அறிஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கடந்தகால நிகழ்வுகளை நினைவு கூர்ந்த பிரதமர், ஜூலை மாதம் என்பது பல வருட அழிவுகளையும், புத்தகங்கள் எரிக்கப்பட்டதையும் பற்றிய நாட்டின் வேதனையான வரலாற்று அனுபவங்களை நினைவூட்டும் காலம் என்று கூறினார். குறிப்பாக 1981 இல் யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் ஒருபோதும் மறக்க முடியாதது என்று சுட்டிக்காட்டிய அவர், உத்தியோகபூர்வ கதைகள் மூலம் கடந்தகால நினைவுகளை அழிக்கவோ அல்லது புறக்கணிக்கவோ முயற்சிக்கும் போது, கடந்தகாலத்தின் உயிருள்ள சாட்சிகளாகவும், அழிவுகளுக்குப் பிறகு மீண்டெழுந்த மக்களின் கதைகளை பாதுகாக்கும் ஆதாரங்களாகவும் இலக்கியமும் புத்தகங்களும் திகழ்கின்றன என்று வலியுறுத்தினார்.
நாட்டை வடிவமைத்த அனுபவங்கள் குறித்து எதிர்கால சந்ததியினருக்கு சரியான புரிதலை வழங்குவதற்காக வரலாற்றின் முக்கியமான அத்தியாயங்களை கல்வி முறையில் சேர்ப்பதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அறிவு, நினைவகம் மற்றும் வரலாற்றைப் பாதுகாப்பதில் புத்தகங்கள், எழுத்தாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் வகிக்கும் பங்கை மதிக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவது அத்தியாவசியம் என்று கூறிய பிரதமர், அறிவு, படைப்பாற்றல் மற்றும் சுதந்திரமான வெளிப்பாட்டை மதிக்கும் ஒரு சமூகத்திற்கு சவால்களை எதிர்கொள்ளவும், புதுமைகளை உருவாக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் அதிக திறன் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆரம்ப நிகழ்வில் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதுவர் சசி தரூர் (Shashi Tharoor), தூதுவர் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் மற்றும் அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.