லேசர் கதிர்கள் கண்ணில் பட்டு யாழ்ப்பாணத்தில் 150 பேர் மருத்துவமனையில்

150-in-the-hospital-in-jaffna-after-laser-rays-hit-the-eye

யாழ்ப்பாணம் பண்டாரத்தரிப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள முருகமூர்த்தி கோவிலில் நடைபெற்ற ஒரு விழாவின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவத்தினால் 150க்கும் மேற்பட்டோர் கண் தொடர்பான ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற இந்த விழாவில் பயன்படுத்தப்பட்ட உயர் சக்தி லேசர் கதிர்கள் மற்றும் பட்டாசு வெடித்ததில் வெளியான அதிக புகை இந்த நிலைமைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




விழா நடைபெற்ற இடத்தில் இருந்த அதிக புகை மற்றும் சக்திவாய்ந்த லேசர் ஒளி கண்களில் பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் பார்வை குறைபாடுகளும் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை காரணமாக ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களில் 120 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் 46 பேர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 60 பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் புதிய நோயாளிகள் பதிவாகி வருவதால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்கலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி தேவையான சிகிச்சைகளை வழங்க வைத்தியசாலை ஊழியர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனவே, கண் தொடர்பான ஏதேனும் ஒவ்வாமை அல்லது அசௌகரியம் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுமாறு அவர் பொதுமக்களை மேலும் கேட்டுக்கொண்டார்.

Post a Comment

Previous Post Next Post