மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கான முறையான பொறிமுறையைத் தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சரவைக்கு விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நானாயக்கார தெரிவித்தார்.
சிறைச்சாலை அதிகாரிகள், நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் உட்பட துறையின் அனைத்து தரப்பினரின் பங்கேற்புடன் வெலிக்கடை சிறைச்சாலையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா தலைமையில் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன், குறித்த முறையான பொறிமுறையைத் தயாரிப்பதற்காக குழு உறுப்பினர்கள் பத்து மாத காலப்பகுதியினுள் விரிவான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் செயல்முறைக்கான முறையான திட்டத்தை தயாரித்தல், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் தண்டனை காலத்தை ஆயுள் தண்டனையாக தளர்த்துதல், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் நபர்களின் தண்டனை காலத்தை 20 வருடங்களாக குறைத்தல் மற்றும் கைதிகளுக்கு வீட்டு விடுமுறை வழங்குதல் என்பன இந்தக் குழு அறிக்கையின் முக்கிய பரிந்துரைகளில் அடங்கும்.