கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த சுமார் எட்டு இலட்சம் ரூபா பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்நூல்கள் தொகுதி உரிய இடங்களுக்கு ஒப்படைக்கப்படாமல் குற்றவியல் நம்பிக்கை மோசடி தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இசுருபாய கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் முதலாம் தர மாணவர்களின் மூன்றாம் தவணைக்குரிய இந்த 19,892 பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்நூல்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 விநியோக நிலையங்களுக்கு வழங்கப்படவிருந்தன. அவ்வாறு ஒப்படைக்கப்படாமை தொடர்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் ஆணையாளர் (உற்பத்தி மற்றும் விநியோகம்) என். டபிள்யூ. டி. நிரோய் குணவர்தன அம்மையார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த புத்தகத் தொகுதி இசுருபாய கல்வி வெளியீட்டுத் திணைக்கள வளாகத்திலிருந்து கொண்டு செல்வதற்காக பியகம, சியம்பலாபே, சமுர்த்தி மாவத்தையில் அமைந்துள்ள டஸ்மா இன்டர்நெஷனல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததுடன், கடந்த மே மாதம் 04 ஆம் திகதி ஒரு லொரி வண்டியிலும் அதன் சாரதியின் பொறுப்பிலும் இந்தப் புத்தகங்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், குறித்த நிலையங்களுக்கு அந்தப் பாடப்புத்தகங்கள் கிடைக்கப்பெறவில்லை என கல்வித் திணைக்களத்தின் வெளியீட்டுப் பிரிவின் கிழக்கு மாகாண பொறுப்பதிகாரி ஜகத் வன்னிஹாரச்சி அவர்கள் கடந்த 07 ஆம் திகதி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார். அதற்கமைய முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஸ்ஸங்க சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.