மாகும்பர பல்வகை போக்குவரத்து மையத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரற்ற போதைப்பொருள் சோதனையின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நான்கு பஸ் சாரதிகளும் ஐந்து நடத்துனர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சட்டபூர்வமான அனுமதிப்பத்திரங்கள் இன்றி சேவையில் ஈடுபட்டிருந்த மூன்று நடத்துனர்களும் சோதனையின் போது அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, மாகும்பர பல்வகை போக்குவரத்து மையம் மற்றும் ஹோமாகம தலைமையகப் பொலிஸார் இணைந்து இந்த விசேட சோதனை நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் இயங்கும் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் சேவையில் ஈடுபட்டுள்ள 152 சாரதிகளும் நடத்துனர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலையில் இயங்கும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனர் உட்பட இந்த ஒன்பது பேரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர்.