அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதையடுத்து, அது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ், எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு வெளியே கடமையாற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவரின் தலைமையில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த காணொளிகளில், தனது தந்தையை பொலிஸார் தாக்கியதாகக் குற்றம் சுமத்தி ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் தகாத முறையில் நடந்துகொள்ளும் விதம் காணப்படுகிறது. எனினும், காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ள வயோதிப நபர் கடந்த 24ஆம் திகதி இரவு அதிக மது அருந்தி வீதியில் தகாத முறையில் நடந்துகொண்டதன் காரணமாக கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர் கைது செய்யப்படும் போது, பொலிஸாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சித்த போது விழுந்ததால் ஏற்பட்ட இரத்தக் கசிவின் அடையாளங்கள் குறித்த காணொளிகளில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னர் மறுநாள் (25) அம்பலாங்கொடை பொலிஸாரால் இந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டார். அதன்பின்னர் பலப்பிட்டிய மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.